நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற பயணிகள் கப்பலில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்திய போது கைது செய்தனர். ஆர்யன் கானும், அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் ஒரு மாதம் வரை சிறையில் இருந்தனர். ஆரம்பத்தில் இவ்வழக்கு விசாரணையை, ரெய்டு நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே நடத்தினார். ஆனால் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், பாஜகவின் துணையோடு சமீர் வாங்கடே மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுவதாக அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார். இதைடுத்து சமீர் வாங்கடே இவ்வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தற்போது டெல்லியை சேர்ந்த போதைப்பொருள் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. ஏற்கனவே சம்பவம் நடந்து 6 மாதங்களாகிவிட்டது. இவ்வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் தடுப்பு சட்டப்படி 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும். ஆனால் குற்றப்பத்திரிக்கை செய்ய கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டது. இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இவ்வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் 90 நாள்கள் அவகாசம் கொடுக்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் கேட்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார். ஆர்யன் கான் தொடர்பான வழக்கில் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 17 பேர் இப்போது ஜாமீனில் இருக்கின்றனர். ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விசாரணையில் 5 நாள்கள் இருந்தார். மொத்தம் 27 நாட்கள் சிறைக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.