மும்பை : இந்தியாவின் வங்கி மோசடிகள் மூலம் தினமும் ரூ.100 கோடி இழப்பு ஏற்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் படி, 2015 ஏப்ரல் மாதம் முதல் 2021 டிசம்பர் வரை வங்கி மோசடிகள் மூலம் மொத்தம் 2.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நிதி தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பை பெருநகர் அடங்கியுள்ள மராட்டிய மாநிலத்தில் தான் மொத்த தொகையில் 50% மோசடி நடந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. இதற்கு அடுத்ததாக டெல்லி, தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகளவில் வங்கி மோசடி புகார்கள் பதிவாகி உள்ளன. 8 வகையான வங்கி மோசடிகளை ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. அதில் வங்கி கணக்கை தவறாக பயன்படுத்துதல், நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் கொடுத்து பணம் பெறுதல், கணக்குகளில் திருத்தம், சோத்து பரிமாற்றத்தில் தில்லு முள்ளு, வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் முறைகேடு, ஏமாற்றுதல் போன்றவை இடம் பெற்றுள்ளன. வங்கி மோசடிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. அதன்படி, 2015-2016 நிதியாண்டில் 67,760 கோடி ரூபாயாக இருந்த இழப்பு தொகை, 2020-2021ல் 10,699 கோடி ரூபாயாக குறைந்தது புள்ளி விவரம் மூலம் தெரியவந்தது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள வல்லுநர்கள், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள அபாய மதிப்பீடு விதிகளை இந்திய வங்கிகள் பின்பற்றுவதில்லை என்றனர். இதுவே வங்கி மோசடிகள் அதிகரிக்கக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.