தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல நகரங்களில் மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தி உள்ளனர். இன்றும் அவை தொடரக்கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோ, டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் நேற்றும் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கேரள மாநிலம் கோழிக்கேட்டில் ஏராளமானோர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஓட்டுநருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்டோவின் கண்ணாடியை சேதப்படுத்தியதோடு, டயரில் காற்றையும் திறந்துவிட்டனர்.
கேரளா மட்டுமன்றி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் ரஞ்சியிலும், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக வங்கி உழியர்கள் உள்பட அரசு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பொது போக்குவரத்து சேவை முறையாக இல்லாததால் பயணிகள் அவதியடைந்தனர்.
தமிழகத்திலும் நேற்று பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இயங்கும் பேருந்துகளில் 33% பேருந்துகள் மட்டுமே இயங்கியதாகவும், 67% பேருந்துகள் இயங்கவில்லை என்றும் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்தி: எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.352 கோடி! அரசாணை வெளியிட்டது அரசுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM