சிங்கப்பூர்:மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த இந்திய வம்சாவளியின் மனுவை, சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவை சேர்ந்தவர் நாகேந்திரன் தர்மலிங்கம், 34. இந்திய வம்சாவளியான இவர், 13 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்கு போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன.
சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் நாகேந்திரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.அதில், தான் கைதான போது, தன் மனநிலை, 18 வயதுக்கு உட்பட்டவரை போல இருந்ததாகவும், தற்போதும் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் மரண தண்டனையை ரத்து செய்யும்படியும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:மனுதாரர், தனக்கு மனநிலை சரியில்லை என்பதால், மரண தண்டனையை ரத்து செய்யும்படி கோரியுள்ளார். ஆனால், அதற்கான எந்த சான்றையும் அவர் அளிக்கவில்லை. வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில், திரும்ப திரும்ப மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனைக்கு எதிரான தீர்வுகளை கோர மனுதாரருக்கு உரிமை உள்ளது. ஆனால், ஒன்றுக்கும் உதவாத மனுக்களை அடுத்தடுத்து தாக்கல் செய்து, நீதிமன்றத்தை அவமதித்து உள்ளார். அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement