பஞ்சாப் மாநில மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பஞ்சாப் இளைஞர்கள் தங்கள் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை மாநிலத்தில் பெறுவார்கள். இதனால் அவர்கள் சமூகத்தின் சிறந்த குடிமக்களாக மாற முடியும்” எனத் தெரிவித்தார்
மேலும், “பஞ்சாபி பல்கலைக்கழகத்தை கடனில் இருந்து விடுவிப்பதாக நான் உத்தரவாதம் அளிக்கிறேன், இதன் மூலம் வட இந்தியாவில் உயர்கல்விக்கான இடமாக அதன் பழமையான பெருமையை மீட்டெடுக்கிறேன். மாநில மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதே எங்கள் முன்னுரிமை” எனத் தெரிவித்தார்
முன்னதாக, பஞ்சாபின் 17வது முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான், ஊழல் தொடர்பான விஷயங்களைப் பொதுமக்கள் புகாரளிக்க ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.
இது தொடர்பாக ட்வீட் செய்த பகவந்த் மான், “பகத் சிங்கின் தியாகி தினத்தன்று, ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்படும். இது எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அவர்களின் ஆடியோ/வீடியோ கிளிப்பை பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் ஊழலுக்கு இனி கால்கள் இருக்காது. 99 சதவீத மக்கள் நேர்மையானவர்கள், மீதமுள்ள 1 சதவீதத்தினரால் தான் இந்த அமைப்பு சீர்குலைந்துள்ளது. பஞ்சாபில் இனி யாரிடம் இருந்தும் பணம் பறிக்கப்படாது, எந்த அதிகாரியையும் அமைச்சர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள் “எனத் தெரிவித்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM