சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ வீழ்த்தியுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் 15 சீசன் டி-20 போட்டிகள் கடந்த சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்கள் குவித்த நிலையில் அதனை கொல்கத்தா அணி வெறும் 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை பறிகொடுத்து 133 ஓட்டங்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவினாலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் முன்னாள் மும்பை இந்தியன் வீரர் லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 170 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன் வீரர் லசித் மலிங்கா பெற்றிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் அந்த சாதனையை தட்டி பறித்துள்ளார்.