பனாஜி:
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எட்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்த பின்னர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட சாவந்த், புதிய நிதியாண்டு முதல், 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கோவா சட்டசபைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் கோவா முதலமைச்சர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சாவந்த், இரும்புத் தாது சுரங்க தொழிலை மீண்டும் ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்… உத்தவ் தாக்கரே தலைமையில் 3 கட்சிகள் இணைந்தே ஆட்சியை நடத்துகிறது: அஜித் பவார்