சேலம் மாநகரில் உள்ள பிரியாணிக்கடை ஒன்றில் தால்ச்சாவில் புழு இருந்ததாக உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் அனுப்ப, உணவுப்பாதுகாப்புத்துறையினர் அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், புகார் சொன்னவர்களை அள்ளிக்கொண்டு போய் சிறையிலடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மருத்துவர்களும், ஒரு மருத்துவ மாணவரும் அடக்கம்.
சேலம் திருவாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ஆதம் பாக்ஷா. இவர் ஏ.எம்.பிரியாணி எனும் பெயரில் பல்வேறு இடங்களில் உணவகங்கள் வைத்துள்ளார். இவரது கடையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, “புதுக்கோட்டையைச் சேர்ந்த பாஸ்கர். அரியலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இருவரும் பல் மருத்துவர்கள். சதீஷ்குமார், தனது திருமணத்துக்காகச் சேலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு அழைப்பிதழ் கொடுக்க பாஸ்கருடன் சேலம் வந்திருக்கிறார். மூவரும் ஏ.எம் பிரியாணி கடைக்குச் சாப்பிட வந்துள்ளனர். அப்போது மருத்துவ மாணவர், அவரின் நண்பர் அருண்குமார் மற்றும் சிலரை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார். அவர்கள் வருவதற்குள், மூவரும் சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அப்போது தால்ச்சாவில் புழு இருந்திருக்கிறது. உடனே கடை மேலாளர் வினோத் என்பவரிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். அது வாக்குவாதமாக மாற, கோபமடைந்த மருத்துவ மாணவர், சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, அப்பகுதியின் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவலிங்கம், ஏ.எம்.பிரியாணி கடைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வில் புழு இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவ மாணவரின் நண்பர்கள், அருண்குமார், கணேசன், பிரபு ஆகியோர் அங்கு வந்துள்ளனர். விஷயம் கேள்விப்பட்டவுடன் அவர்களும் கடையின் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதோடு, கணேசன், மேலாளர் வினோத்தை மிரட்டி பணம் கேட்டதாகவும் தெரிகிறது. அதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் ஆதம் பாஷா, சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் போனில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர், 6 நபர்களையும் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளார்” என்றனர்.
இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவனிடம் பேசினோம், “எனக்கு புகார் வந்த உடனே நான் சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவலிங்கம் என்பவரை நேரில் சென்று விசாரிக்கச் சொன்னேன். அதில் பிரியாணிக்கு ஊற்றப்படும் தால்ச்சாவில் புழு இருந்தது உண்மைதான் என்று தெரியவந்தது. இந்தப்புழுவை வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு கிடையாது. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் ஆய்வு செய்தபோது, புழு இருந்ததாகவும், இனி இதுப்போன்று தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் எழுதி வாங்கியிருக்கிறோம்” என்றார்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீஸார் பிரியாணி கடைக்கு வந்தபோது, உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இந்த 6 பேர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மருத்துவ மாணவரின் பெற்றோரிடம் பேசியபோது, “நாங்க நல்ல வசதியான குடும்பம் தான். அப்படி இருக்கும் போது எங்க பையன் எதுக்கு பணம் கேட்டு மிரட்டணும். இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. உணவுப் பாதுகாப்புத்துறைக்கு புகார் கொடுத்ததால இப்படி வேணும்னே புகார் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பிருக்காங்க. அந்த சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளருக்கு, மாநகர காவல் உயரதிகாரி ஒருவர் நல்ல நெருக்கம். அவரின் தலையீட்டின் பேரில் தான் எங்க பசங்க கைது செய்யப்பட்டிருக்காங்க.” என்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பேசினோம். “தால்ச்சாவில் புழு இருந்தது உண்மைதான். ஆனா, அதை வெச்சு இந்த பசங்க பிரச்னை செஞ்சு சத்தம் போட்டுருக்காங்க. மிரட்டி பணம் கேட்டதா கடை உரிமையாளர் கொடுத்த புகார் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுத்திருக்கோம். அந்த 2 டாக்டர்களுக்கும் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டுக்கும் சப்போர்ட் பண்ண வந்தவங்க மேல ஏற்கெனவே வழக்குகள் இருக்கு” என்றார்.
இந்த நிலையில், போலீஸார் கைது செய்யப்பட்ட 6 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதி, “படிக்கிற மாணவர்கள் மீது எப்படி வழக்கு போட்டிங்க. இவங்களுக்கும், நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கு” என்று போலீஸாரிடம் கேள்வியெழுப்பினார். அதையடுத்து, 6 பேரையும் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தினார். அதனடிப்படையில் மேற்கண்ட 6 பேருக்கும் இன்று ஜாமீன் வழங்கப்பட்டு வெளியில் வந்தனர்.