புதுடில்லி : ‘புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில உத்தரவுகளை பிறப்பித்தது.அவற்றின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத தேர்தல் கமிஷனுக்கு எதிராக, தி.மு.க., – எம்.எல்.ஏ., சிவா உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தவில்லை என, தேர்தல் கமிஷனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலானது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடத்த நான்கு மாத அவகாசம் அளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் சார்பில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் அனைத்தும், நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் அவகாசம் கோரிய மனு மீதான விசாரணை, ஆறு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு பிரச்னையில் மனுதாரர்கள் மற்றும் எதிர்தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டும்.இவை தவிர, புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிற மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement