சென்னை:
2-வது நாளாக இந்தியா முழுவதும் இன்று வங்கிகள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய தொழிற்சங்கங்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த கோரிக்கைகளை ஆதரித்து அரசு வங்கி ஊழியர்கள், தனியார், அயல்நாட்டு வங்கி ஊழியர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதன் விளைவாக இயல்பான வங்கி பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட வங்கி சேவைகள் கிளைகளில் நடத்த முடியவில்லை.
வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் போடுவது, எடுப்பது போன்ற சேவைகள் முடக்கப்பட்டன. காசோலை பரிவர்த்தனையும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் சேவைகள் 2 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இயங்கும் தென்னக காசோலை பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள 6 லட்சம் காசோலைகள் 2 நாட்களில் பரிவர்த்தனை ஆகாமல் கிளைகளில் தேங்கியுள்ளன.
அகில இந்திய அளவில் சுமார் 18 ஆயிரம் கோடி மதிப்புள்ள 20 லட்சம் காசோலைகள் இதே போன்று முடங்கி உள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசின் கருவூல கணக்குகள் கையாள முடியவில்லை. அதே போல கடன் பட்டுவாடா, கடன் வசூலிப்பு போன்ற வங்கி வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தத்திற்கு அடிப்படை காரணம் மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையின் அடிப்படையில் வங்கிகளை தனியார் மயம் செய்யும் முயற்சிகளை மேற்கொள் கின்றனர்.
வங்கிகளில் 162 லட்சம் கோடி ரூபாய் மக்கள் சேமிப்பு வைப்பு தொகையாக உள்ளது. இதற்கு முழுமையான பாதுகாப்பு பொதுத்துறை வங்கிகளே.
கடந்த ஆண்டுகளில் பல தனியார் வங்கிகள் தவறாக நடத்தப்பட்டு பொதுமக்கள் தங்களுடைய சேமிப்பை இழந்துள்ளனர். இந்நிலை மீண்டும் வரக்கூடாது. அதே போன்று வங்கி அரசுடமையாக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான கிளைகள் கிராமங்களிலும் சிறிய ஊர்களிலும் தொடங்கப்பட்டு ஏழை-எளிய மக்களுக்கு வங்கி சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
வங்கிகளை தனியார் மயம் செய்தால் லாபமின்மை என்ற காரணத்தை கூறி இந்த கிளைகள் மூடப்படும் ஆபத்து ஏற்படும்.
அதே போன்று வளர்ந்து வரும் இந்திய பொருளாதார பின்னணியில் முன்னுரிமை துறைகளான விவசாயம், வேலைவாய்ப்பு, சிறு, குறு தொழில், குடிசைத் தொழில், பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு அரசு வங்கிகள் பெருமளவில் கடன் உதவி செய்து வருகின்றன. வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் பெரும் முதலாளிகளுக்கு அதிகமாக கடன்கள் வழங்கப்பட்டு முன்னுரிமை கடன்கள் பின்தள்ளப்படும்.
எனவே தனியார் மய முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இந்த வேலைநிறுத்தத்திலும் அரசின் தனியார் மய கொள்கையை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருகின்றனர். நாட்டின் நன்மையை கருதியும், மக்கள் நன்மையை கருதியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.