மதுரையில் வரிப்புலியை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கூடல்நகரைச் சேர்ந்தவர் நிவாஸ் கணேஷ். இவர் தனது வீட்டின் அருகே கால் உடைந்த நிலையில் காயத்துடன் கிடந்த நாட்டு நாய் ஒன்றை தூக்கிச் சென்று கடந்த நான்கு வருடங்களாக பாசமுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில் அந்த நாயின் உடலின் வரிவரியாக புலிபோன்று கோடுகள் இருப்பதால் இதற்கு வரிப்புலி என பெயர்சூட்டி வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 24ஆம் தேதி வீட்டில் இருந்த நாய் காணாமல் போன நிலையில், அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து எப்படியாவது நாயை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கூடல்நகர், விளாங்குடி, அஞ்சல்நகர் போன்ற பகுதிகளில் நாயின் படத்தை போட்டு எங்கள் வீட்டு செல்லப் பிள்ளையான வரிப்புலியை காணவில்லை என்ற வாசகத்துடன் கண்டுபிடித்துத் தர உதவுமாறு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
இதையடுத்து தான் வளர்த்த நாயை காணவில்லை என போஸ்டர் ஒட்டியுள்ள நிவாஸ் கணேஷை தொடர்பு கொண்ட பொதுமக்கள் சிலர் ஆறுதல் தெரிவித்தாலும் நாய் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் சோகத்துடன் காணப்படுகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM