திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் நத்தம் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படைவீரராக வேலை பார்த்து வருகிறார். ராகேஷ், அவரின் 2 குழந்தைகள் உட்பட 6 பேருடன் திருப்பதிக்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். இன்று காலை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பி.கே அகரம் பகுதி அருகே கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென காரில் இருந்து புகை வரத் தொடங்கியிருக்கிறது. அதனைப் பார்த்து பதறிப்போனவர்கள், காரை ஓரம்கட்டி இறங்க முயற்சித்துள்ளனர். அதற்குள்ளாக புகைந்து கொண்டிருந்த கார் திடீரென மளமளவென தீப்பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.
தீப்பற்றியதில் காரின் கதவுகளை திறப்பதில் சிரமம் ஏற்பட, ஒருவழியாக போராடி சிறு தீக்காயங்களுடன் காரிலிருந்த குழந்தைகள் உட்பட 6 பேரும் உயிர் தப்பினர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் காரில் இருந்த தீயை அணைத்ததோடு, காயமடைந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘காரிலிருந்த பெட்ரோல் லீக் ஆகி, சூடான என்ஜினில் பட்டதன் காரணமாகக் கூட கார் தீ பிடித்திருக்கலாம்’ என கூறும் போலீஸார், இந்த விபத்திற்கு வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.