“தேசிய அளவில் காங்கிரஸ் வலிமையான கட்சியாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் அந்த இடத்தை மாநில கட்சிகள் நிரப்பும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் இந்திய ஜனநாயகம் பாதிக்கப்படும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து பேசியுள்ளார். தனது அந்த கருத்தில், “ஜனநாயகம் சரிவர இயங்க வேண்டுமென்றால் வலிமையான எதிர்க்கட்சி அவசியம். எனவே, காங்கிரஸ் தேசிய அளவில் வலிமையான கட்சியாக திகழ வேண்டும். அதுவே எனது ஆழ்மனது விருப்பம். காங்கிரஸ் பலவீனமடைந்தால் அந்த இடத்தை பல்வேறு மாநில கட்சிகள் நிரப்பும் நிலை ஏற்படும். அப்படி ஏற்பட்டால், அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்று தெரிவித்தார்.
கட்கரியின் கருத்தை தங்கள் கட்சி வரவேற்பதாக மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் சாவந்த் தெரிவித்துள்ளார். `காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக வேண்டும்’ என பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் பேசி வரும் நிலையில் வலிமையான காங்கிரஸ் தேவை என கட்கரி பேசியுள்ளது அக்கட்சியினருக்கு உத்வேகத்தை கொடுக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்தி: இந்தியா முழுவதும் தொடரும் தொழிற்சங்கம் போராட்டம் – நேற்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM