கீவ்: இரு நாடுகளுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கை ஏற்படுத்தவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தேவையான நம்பிக்கைகளை உருவாக்கவும், உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரலிருந்து ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் இந்தப் போர் உலகின் பல்வேறு காரணிகளை பாதித்துள்ளது. இதனால் போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன. இன்று செவ்வாய்க்கிழமை துருக்கியில் வைத்து இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இருதரப்பு பிரதிநிதிகளும் இஸ்தான்புல்லில் உள்ள டோல்மாபாஸ் அரண்மனையில் நடந்தது.
ரஷ்யத் தரப்புக்கு அந்நாட்டின் இணை ராவணுவ அமைச்சர், அலெக்சாண்டர் போமின் தலைமை தாங்கினார். உக்ரைன் தூதுக் குழுவிற்கு டேவிட் அரகாமியா தலைவராக இருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஷ்யாவின் இணை ராணுவ அமைச்சர் அலெக்சாண்டர் போமின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ” இன்றைய பேச்சுவார்த்தையில், நடுநிலையான, அணுசக்தி இல்லாத நிலைப்பாடு ஒப்பந்தங்களை தயாரிப்பது, அதனை நோக்கி நகர்வது, உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது போன்ற கொள்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இருதரப்பு பரஸ்பர நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தேவையான சூழ்நிலைகளை உருவாக்கவும், ஒப்பந்தத்தின் இறுதி இலக்கை அடைவதற்காகவும், மேற்கூறிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காகவும், ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சகம், கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரங்களில் படிப்படியாக ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளும்” என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோல்யாக் கூறும்போது, “இந்த பேச்சுவார்த்தை பல விவகாரங்களில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டது. அதில் முதன்மையானது உக்ரைனுக்கான சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான ஒப்பந்தமாகும். இந்த உடன்படிக்கையின் மூலம் மட்டுமே உக்ரைனுக்கு தேவையான போர் நிறுத்தம் சாத்தியமாகும். விவாதிக்கப்பட்ட அடுத்த பிரச்சினை போர்நிறுத்தம். இதன் மூலம் அனைத்து மனிதாபிமான வழித்தட பிரச்சினைகளும் தீர்க்கப்படும்” என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் ரஷ்ய தூதுக் குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினராக இல்லாமல் இருநாடுகளுக்குமான இடைநிலையாளராக ரஷ்யாவின் ரோமன் அப்ரமோவிச் கலந்துகொண்டார்.