கைவிடப்பட்ட கனவுப் படத்தை மீண்டும் இயக்கும் தனுஷ்? – வெளியான தகவல்

நடிகர் தனுஷின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி வந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டநிலையில், அந்தப் படத்தை தனுஷ் மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது போன்றவற்றின் மூலமும் தனது திறமைகளை நிருபித்து வந்தார். இதையடுத்து கடந்த 2017-ல், ‘ப. பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தில், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் தனுஷ் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை மையமாக கொண்டு, இரண்டாவதாக ஒரு படம் இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் தனது கனவுப் படமான அந்தப் படத்தை நடிகர் தனுஷ் கைவிட்டதாக கூறப்பட்டநிலையில், பல படங்களில் தனுஷ் நடித்து வருவதாலேயே, அந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது.

image

இந்நிலையில், நடிகர் தனுஷ் அந்தப் படத்தை மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘நான் ருத்ரன்’ என பெயரிடப்பட்டிருப்பதாகவும், தற்காலிகமாக ‘டிடி2’ என பெயரிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹைதரி மற்றும் நாகார்ஜுனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்ன ஜிகே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

கடந்த வருடம் இந்தப் படம் குறித்து நாகர்ஜுனா பேசுகையில், ‘இது ஒரு குறிப்பிட்ட காலத்து வரலாற்று கதை. இந்தப் படத்தில் வரும் எனது கதாபாத்திரம் எனக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. ஏனென்றால் நான் நடித்துள்ள படங்களில் இதுவரை செய்யாத ஒன்றை, இந்தப் படத்தில் செய்துள்ளேன். 600 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இது ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.