பனாஜி: கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு நேற்று பதவியேற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களை ஆளும் பாஜக கைப்பற்றியது. ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 3 சுயேச்சைகள் மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி யின் 2 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினமே ஆளுநரை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து கோவா தலைநகர் பனாஜியில் உள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி அரங்கத் தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 2-வது முறையாக பிரமோத் சாவந்த் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தரன் பிள்ளை பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிர மாணமும் செய்து வைத்தார். முதல்வரோடு 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வரும் பெரும்பாலான அமைச்சர்களும் கொங்கணி மொழியில் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.