புனே:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் புனேயில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஹெட்மையர் 13 பந்தில் 32 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 210 ரன்கள் குவித்தது.
ஐதராபாத் சார்பில் உம்ரான் மாலிக், நடராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் 37 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிய, மார்கிராம் தனி ஆளாக ரன் சேர்த்தார். அவருக்கு வாஷிங்டன் சுந்தர் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 14 பந்தில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது. மார்கிராம் அரை சதமடித்து 57 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் சார்பில் சாஹல் 3 விக்கெட், போல்ட், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.