புவனேஸ்வர்: ஒடிசாவில் குறும்பட சினிமா ஷூட்டிங்கின் போது நடிகை ஒருவரை கைகால்களை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த வழக்கில், நடிகர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரின் புறநகரில் உள்ள பரத்பூரில் குறும்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அந்தப் படத்தில் நடித்த நடிகையை, அதன் நடிகர் சூரஸ் பிஸ்வால், உதவியாளர் பிஸ்ணு உள்ளிட்ட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை பரத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து தலைமறைவாக இருந்த சூரஸ் பிஸ்வால் உள்ளிட்ட மூன்று பேரையும் கோர்தாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பிரபல மாடல் அழகி சவுமியா ரஞ்சன் பாணிக்ராஹி தற்கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் எடுக்கப்பட்டது. சவுமியாவின் கதாபாத்திரத்தில் இளம் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். குறும்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி பரத்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றது. அப்போது அந்த நடிகையின் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு, நடிகர் சூரஸ் பிஸ்வால் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக அவரது உதவியாளர் பிஸ்ணு உள்ளிட்ட இருவர் இருந்துள்ளனர். தற்போது குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.