புதுடெல்லி:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவதை தடுக்க விமான நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி சர்வேதேச விமான நிலையத்தில் நைரோபியாவில் இருந்து வந்த 2 கென்யா பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர்கள் 15.57 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 19 தங்க கட்டிகளும் அடங்கும். இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அதில் ஒருவர் இதேபோன்று 4 அல்லது 5 முறை தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்தது தெரிய வந்தது. மற்றொருவர் முதன்முறையாக இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அவர்கள் எங்கிருந்து தங்கத்தை கடத்தி வந்தார்கள் என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமீப காலத்தில் டெல்லியில் அதிக அளவு தங்கம் சிக்கியுள்ளது இப்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.