சென்னை
பொதுமக்கள் மற்றும் மாணவர் நலனுக்காக தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தொமுச தெரிவித்துள்ளது.
நேற்று தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரனமாக பேருந்துகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கியதால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர். மாணவர்களால் கல்வி நிலையங்களுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தொமுச நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம்,
“இரண்டு நாட்களாக மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. நேற்று தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. தற்போது பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் உள்ளன என்ற கருத்துகள், கோரிக்கைகள் வருகிறது. எனவே, நாளை நடைபெறக்கூடிய வேலைநிறுத்த திட்டத்தை மாற்றி அமைக்கிறோம்.
நாளை (அதாவது இன்று) போராட்டம் நடைபெற்றாலும் பேருந்துகள் ஓடும். இன்று தமிழகம் முழுவதும் 60 % பேருந்துகள் இயங்கும். ஆயினும் முன்னணி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இந்த முடிவை நாங்கள் கலந்துபேசி அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படாமல் வேலைநிறுத்தம் நடைபெறும். மக்கள், மாணவர்கள் நலன் கருதி இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். இதன் அடிப்படையில் அந்தந்த அமைப்புகள் கூடி முடிவெடுத்துக் கொள்வார்கள்.”
எனத் தெரிவித்துள்ளனர்.