திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே வீரக்கல் கிராமத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டாசு தயாரிக்கும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தேனி, மதுரை எனப் பல்வேறு பகுதிகளுக்கும் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தப் பகுதியில் திம்மராய பெருமாள் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்திவரும் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் நான்கு பேர் பணி செய்துவருகின்றனர். இந்த நிலையில், அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், கருப்பையா, சசிகுமார் ஆகியோர் இன்று வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென பட்டாசு வெடிக்கத் தொடங்கியது. சிறிய அளவில் வெடித்த பட்டாசு சில நிமிடங்களில் தீ பரவி, அனைத்துப் பட்டாசுகளும் வெடிக்கத் தொடங்கிவிட்டன.
பெரிய அளவில் வெடிச்சத்தம் ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுமக்கள் அனைவரும் நிகழ்விடத்துக்குச் சென்று பார்த்தனர். அப்போது புகை மண்டலமாகக் காட்சி அளித்ததால் உடனடியாக காவல்துறை, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்தவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த சசிகுமார், கருப்பையா, ஆறுமுகம் ஆகிய மூன்று பேரையும் மீட்டு திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பட்டாசு வெடி விபத்து என்பதால் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை சந்தித்துப் பேசினார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறிச் சென்றார்.