'திராவிட மாடல் பெருமை பேசும் அரசின் அமைச்சர் மீதான சாதி ரீதியான புகார் வெட்கக்கேடானது' – மநீம

சென்னை: சாதி மதம் கடந்தது திராவிட மாடல் என்று பெருமையாகப் பேசும், அரசின் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது

இது குறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ராஜேந்திரன். இவரைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியல் இனத்தவர் என்று பலமுறை கூறி, அவர் மீது சாதிய ரீதியிலான தாக்குதலும், பலமுறை அவரை ஒருமையில் பேசி அதிகாரத்தை துஷ்பிரயோகமும் செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

அதிமுகவின் சேர்மன் பேச்சைத்தான் அவர் கேட்பார் என்றும், அமைச்சர் சொல்வதை அவர் கேட்பதில்லை என்றும் சொல்லி “நீ SC BDO தானே” என்றும், “உன்ன இன்னைக்கே வேற இடத்துக்கு தூக்கி அடிக்கிறேன்” என்று தன் சாதிய வெறியையும், அதிகார பலத்தையும் காட்டியுள்ளதாக ராஜேந்திரன் புகார் சொல்கிறார்.

அத்துடன் இல்லாமல் “தமிழகம் முழுக்க இனிமே நாங்கதான் வேற எவனும் வர முடியாது” என்று பேசியதாகவும் சொல்லி இருக்கிறார். இது தமிழகம் முழுக்க இனி திமுகதான் என்கிற ஆணவ பேச்சா அல்லது சாதிய ரீதியிலான அகந்தைப் பேச்சா என்று தெரியவில்லை!

ஒரு பக்கம் சமூக நீதி காக்க முதல்வர் ஸ்டாலின் குழு அமைக்கிறார். சாதி மதம் கடந்தது எங்கள் திராவிட மாடல் என்று பெருமையாகப் பேசுகிறார். ஆனால் அவர் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது.

இது குறித்து உடனடியாக விசாரித்து, இது உண்மை எனும் பட்சத்தில் போக்குவரத்துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதுவே சமூகநீதியை காப்பதாய் முதல்வர் கூறும் செய்தியை உண்மையாக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கருதுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கருணாநிதிக்கு பிடித்த வள்ளுவனின் வரிகளை முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகிறது மக்கள் நீதி மய்யம்.” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.