திமுகவில் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பணியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரீசன் திமுகவிலோ அல்லது அரசியலில் எம்.பி அல்லது எம்.எல்.ஏ பதவியையோ விரும்பவில்லை என்றாலும் அவருக்கு ஏதாவது ஒரு பதவியைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் பேசுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபாவில், தமிழ்நாடு சார்பில், காலியாகப் போகும் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளில் திமுகவுக்கு மட்டும் சுளையாக 4 எம்.பி.க்கள் கிடைக்க உள்ளது. அதனால், ஆளும் திமுகவில் இப்போதே ராஜ்ய சபா எம்.பி.க்களுக்கான ரேஸ் தொடங்கிவிட்டது. கடந்த முறையே, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி அளிக்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால், சபரீசனுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி அளிக்கப்படவில்லை.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் டீம் உடன் நெருக்கமாக இருந்து திமுக சார்பில் தேர்தல் உத்திகளை வகுத்து செயல்படுத்தியவர் சபரீசன். அப்போதே சபரீசனின் பங்களிப்பு குறித்து திமுகவினரால் மட்டுமல்ல, தமிழக அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் பேசப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு அவருடைய மருமான் முரசொலி மாறன் எப்படி அரசியலில் உறுதுணையாக இருந்தாரோ அதே போல, இன்றைய திமுக தலைவருக்கு மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் விளங்குகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், சபரீசன் இதுவரை எம்.பி, எம்.எல்.ஏ என எந்தப் பதவியும் கேட்டதில்லை.
அதுமட்டுமல்ல, திமுகவில் கனிமொழிக்கு அடுத்து டெல்லியில் லாபி செய்வதில், சபரீசன் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதனால், சபரீசனுக்கும் கனிமொழிக்கும் போட்டி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இருவரும் தங்கள் பணியை புரிந்துகொண்டு செயல்படுவதால் போட்டி எதுவும் இல்லை என்கிறார்கள் திமுக வட்டாரங்கள். டெல்லியில் பல அரசியல் உறவுகளை சபரீசன் நல்ல முறையில் பராமரித்து வருகிறார்.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டலின் துபாய் பயணத்தின்போது செய்யப்பட்ட ஏற்பாடுகளில் சபரீசனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானத்தில் சென்றதை பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளன. இந்த சர்ச்சையில், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரைக் குறிப்பிட்டு குடும்பத்துடன் அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
மு.க. ஸ்டாலின் உடன் அவருடைய மனைவி துர்கா, அவருடைய மகன் உதயநிதி சென்றதை குறிப்பிட்டு விமர்சிக்க வில்லை. ஆனால், சபரீசன் சென்றதைக் குறிப்பிட்டு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு காரணம், உதயநிதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆனால், சபரீசன் அப்படி எந்த பதவியிலும் இல்லாததாலேயே இதுபோன்ற விமர்சனங்கள் எழுகின்றன. அவர் எம்.பி.யாகவோ எம்.எல்.ஏ-வாகவோ இருந்திருந்தால் இந்த விமர்சனங்கள் எழுந்திருக்காது. அதனால், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், சபரீசனுக்கு எம்.பி பதவி வழங்க வேண்டும் என்று திமுகவில் குரல்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து காலியாகப் போகும் 6 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளில் திமுகவுக்கு மட்டும் சுளையாக 4 எம்.பி. பதவிகள் கிடைக்க உள்ளது. அதில், சபரீசனுக்கு எம்.பி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரீசனுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்கப்பட்டால், அதற்கு பிறகு, அவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் என்பதால்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது போன்ற விமர்சனங்கள் எழாது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சபரீசன் ராஜ்ய சபாவுக்கு ரெடியாகி வருகிறார் என்று தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“