பெங்களூரு-அடுத்த சட்டசபை தேர்தலுக்கு ம.ஜ.த., தயாராகி வருகிறது என்றாலும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு பணம் புரட்டுவதே பெரும் சவாலாகவுள்ளது.முன்னேற்பாடு உகாதி பண்டிகைக்கு பின், ‘ஜனதா ஜலதாரே’ நிகழ்ச்சியை, ம.ஜ.த., ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் 2023 சட்டசபை தேர்தலுக்கும் முன்னேற்பாடு நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ஜனதா ஜலதாரே நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பை, கட்சி மேலிடம் ஒப்படைத்துள்ளது.சட்டசபை தேர்தலில், 123 தொகுதிகளில் வெற்றி பெற்று, சொந்த பலத்துடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது, ம.ஜ.த.,வின் விருப்பமாகும். தற்போதைய ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்களில், 25க்கும் மேற்பட்டோருக்கு தேர்தல் செலவுக்கு, பணம் புரட்டுவது பெரும் சவாலாக உள்ளது.சமீபத்தில் நடந்த சட்ட சபை இடைத்தேர்தல், மேலவை தேர்தல்களில், வேட்பாளர்கள் செய்துள்ள செலவு ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,க்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.தேசிய கட்சிகள், தங்களின் வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் செலவுக்காக பணம் வழங்கப்படுகிறது. சமீப ஆண்டுகளாக, வசதி படைத்தவர்களே அதிகம் போட்டியிடுவதால், மற்றவர்களால் போட்டியிட முடிவதில்லை.குறிப்பாக மாநில கட்சியான ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,க்களில், 8 – 10 பேருக்கு மட்டுமே கோடிக்கணக்கில் பணம் செலவிட முடியும். மற்றவர்களுக்கு அந்த சக்தியில்லை.பணப்பிரச்னை கட்சி சார்பிலும் நிதியுதவி கிடைப்பதில்லை. எனவே அடுத்த முறை தேர்தலை, எப்படி எதிர்க்கொள்வது என்ற அச்சத்திலேயே, நாட்களை கடத்துகின்றனர். பணப்பிரச்னை காரணமாகவே, சிலர் தேசிய கட்சிகளை நோக்கி பார்வையை திருப்பியுள்ளனர். இது போன்றவர்களின் தொகுதிகளுக்கு, மாற்று வேட்பாளர்களை, ம.ஜ.த., அடையாளம் கண்டுள்ளது. தேர்தலுக்கு தயாராகும்படி உத்தரவிட்டுள்ளது.பணம் இல்லாவிட்டால், ம.ஜ.த., நிர்ணயித்த இலக்கை எட்டுவது கஷ்டம். எதார்த்தத்தை உணர்ந்து, தேர்தல் செலவுக்கு கட்சி பணம் கொடுத்து உதவ வேண்டும். அப்போது தான் தேசிய கட்சிகளுக்கு எதிராக போராட முடியும் என, சில எம்.எல்.ஏ.,க்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.இந்த கட்சிக்கு இப்போது, 32 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
Advertisement