புதுடெல்லி: ஒன்றிய அரசின் தனியார்மய கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்திய 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, வேலைகளை அவுட்சோர்சிங் செய்வதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தின. 2ம் நாளாக நேற்று போராட்டம் நடந்த நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவையில், பூஜ்ய நேரத்தில் இப்பிரச்னையை கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய், ‘‘வேலைநிறுத்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. எல்லாவற்றையும் விற்கும் அரசின் கொள்கையால் மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும்,’’ என்றார்.காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கி உள்ளன. தேசிய வளங்களை கொள்ளை அடிப்பதை நிறுத்த வலியுறுத்தும் இப்போராட்டத்தில், பாஜ.வின் பாரதிய மஸ்தூர் சங்கத்தைத் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். அதே சமயம் இந்த அவையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது,’ என குற்றம்சாட்டினார்.இதே போல, மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில், இவ்விவகாரம் குறித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான பிரச்னை குறித்தும் விவாதிக்க சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்ததை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை. இருப்பினும், வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக 3 எம்பிக்கள் மட்டும் சுருக்கமாக பேச அனுமதி தந்தார். மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் பேசுகையில், ‘‘தொழிலாளர் வர்க்கத்தின் வேலைநிறுத்தத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவைக்கு உண்டு. பிரச்னை குறித்து விவாதிக்க அரசு நேரம் ஒதுக்க வேண்டும்’’ என்றார்.காங்கிரசின் சக்திசிங் கோஹில் பேசுகையில், ‘‘தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடன் நேர்மறையான அணுகுமுறையுடன் பேசி தீர்வு காண வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்,’’ என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயல்பாடு குறித்து அவையில் விவாதம் நடத்த திங்கள்கிழமை பட்டியலிடப்பட்டது, ஆனால், செவ்வாய்க்கிழமை இது நீக்கப்பட்டுள்ளது’ என்பதை சுட்டிக்காட்டினார்.* அவை நடைமுறைப்படி வாய்ப்பு வழங்கப்படும்மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘நிதி மற்றும் ஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதம் முடிந்த பிறகு, தொழிலாளர் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அரசுக்கு பரிந்துரைப்போம். ஆனால், நாங்கள் விவாதத்தை அனுமதிக்கவில்லை என்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. இந்த அவையில் பிரச்னைகளை எடுத்துக் கொள்வதற்கான விதிகள், நடைமுறைகள் உள்ளன. அதன்படியே செயல்பட முடியும். நிதி மசோதா மீதான விவாதத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக பல எம்பிக்கள் பேசினர். அதே போல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தை அவை எடுத்துக் கொள்ளும்போது வேலைநிறுத்தம் தொடர்பான பிரச்னைகள் எழுப்ப வாய்ப்பு வழங்கப்படும்’’ என்றார்.