பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் நாகர்கோயில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி தன் தோள் மீது கைவைத்த பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமியை அடித்ததாக வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், ‘தோளில் பூச்சி உட்கார்ந்ததாக நினைத்து எம்.ஆர் காந்தி தட்டிவிட்டார்’ வி.பி துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது பாஜகவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ள வி.பி. துரைசாமி முன்னர் திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். திமுகவில் சாதி ரீதியான பாகுபாடு உள்ளதாக விமர்சனங்களை வைத்த வி.பி. துரைசாமி திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது.
அண்மையில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வி.பி. துரைசாமி, நாகர்க்கோயில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி, திருப்பதி நாராயணன், உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது, வி.பி.துரைசாமி, நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்திக்கு பின்னால் நின்றிருந்தார். அப்போது வி.பி. துரைசாமி எம்.ஆர். காந்தி தோளில் கை வைத்துள்ளார். இதனால், அதிருப்தியடைந்த காந்தி, துரைசாமியின் கையில் படாரென்று அடித்துள்ளார். இப்படி எம்.ஆர். காந்தி 2 முறை அடித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற வி.பி. துரைசாமி இப்படி அடிவாங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டாரே என்று பலரும் சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் பரிதாபங்களையும் தெரிவித்தனர். திமுகவில் இருந்திருந்தால் சுயமரியாதையுடன் இருந்திருக்கலாம், பாஜகவுக்கு சென்று இப்படி அடிவாங்கலாமா என்று திமுக ஆதரவு நெட்டிசன்கள் வி.பி. துரைசாமியை கிண்டல் செய்தனர்.
இந்த நிலையில், எம்.ஆர். காந்தி தனது சட்டையில் பூச்சி ஏதாவது உட்கார்ந்து விட்டதோ என்று நினைத்துத்தான் அவர் தனது கையைத் தட்டி விட்டதாக வி.பி. துரைசாமி கூறியுள்ளார். இந்த வி.பி. துரைசாமி அளித்துள்ள இந்த விளக்கம் குறித்தும் திமுக ஆதரவு நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“