”நன்றி ஜக்கண்ணா”: ’ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்கு அசத்தலாக நன்றி தெரிவித்த ஜூனியர் என்டிஆர்

’ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.

’பாகுபலி 2’ வெற்றிக்குப்பிறகு ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ வெளியான நான்கே நாட்களில் ரூ.562 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’ஆர்ஆர்ஆர்’ படத்தை உருவாக்கியுள்ளார் ராஜமெளலி. 1920 களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர். அஜய் தேவ்கான், ஆலியா பட், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ராமராஜு, பீம் கதாபாத்திரத்தில் படத்தில் வரும் பாடலைப்போலவே ‘நாட்டு நாட்டு’ என்று போட்டிப் போட்டுகொண்டு நடித்து பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும்.

image

ஏற்கனவே, படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவித்து ராம் சரண் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆரும் உற்சாகமுடன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“’ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்கு வெறும் வார்த்தைகளால் நன்றி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. என்னிடம் இருந்த சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி ஜக்கண்ணா. என்னை பன்முகத்தன்மைக் கொண்டவனாக உணர்ந்ததால்தான் உண்மையிலேயே என்னுள் இருந்த சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள். தம்பி ராம் சரண் இல்லாமல் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை என்னால் கற்பனை செய்து பார்த்திருக்கவே முடியாது. அதேபோல், உன்னைத் தவிர அல்லூரி சீதாராம ராஜுவின் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல, நீ இல்லாமல் பீம் முழுமையடையதவராக இருந்திருப்பார். என் தண்ணீருக்கு நெருப்பாக இருந்ததற்கு நன்றி. குறிப்பாக, எனது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் இதயத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள், ராஜமெளலி, ராம் சரண் உள்ளிட்டோருக்கும் ஆலியா பட்,விஜயேந்திர பிரசாத், டிவிவி தனய்யா, அஜய் தேவ்கான் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.