கொழும்பு,
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.
மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர். எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல மணி நேர மின்வெட்டு உள்ளது.
இந்த நிலையில், “நான் அதிபராக இருந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது” என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இதுகுறித்து கூறும்போது, சர்வதேச நாணய நிதியத்துடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டால், மிகக்குறுகிய காலத்திற்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் என்று கூறினார்.
பிரதமர் பதவியை கோருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், அவ்வாறு பதவியேற்பதற்கான தேவை தனக்கு கிடையாது என்றும் அவர் கூறினார்.