புதுடெல்லி: நீர் மேலாண்மையில் தேசிய அளவில் 3-வது இடம் பிடித்த தமிழகத்திறகு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நீர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா பெற்றுக்கொண்டார். இவை தவிர மேலும் பல பிரிவுகளில் தேசிய நீர் விருதுகளை தமிழ்நாடு பெற்றது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று (மார்ச் 29) புதுடெல்லியில் விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் விருதுகளை வழங்கினர். முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு இரண்டாவது இடத்திற்கான விருதும், தமிழகத்திற்கு 3-வது இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
தமிழகத்திற்கான விருதை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, மற்றும் நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.இராமமூர்த்தி ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த கிராம பஞ்சாயத்து (தென்மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்திற்கான விருதும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சி 3-வது இடத்திற்கான விருதும், சிறந்த பள்ளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்திற்கான விருதும் பெற்றன.
சிறந்த தொழில் பிரிவில் ஹுன்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கான விருதும், சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரா இரண்டாம் இடத்திற்கான விருதும் பெற்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.