நியூயார்க்:அமெரிக்காவில் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு சட்டவிரோதமாக, 7.62 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஹரி பிரசாத் சூர், லோகோஷ் லாகுடு, சோட்டு பிரபு தேஜ் புலகம் பணியாற்றி வருகின்றனர். நண்பர்களான இவர்களுக்கு, தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் தெரிய வந்தன.
கொரோனா வைரஸ் காலத்தில், இந்நிறுவனம் அதிக அளவில் லாபம் ஈட்டியது. அதனால், பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகளின் மதிப்பு உயரும் வாய்ப்பு ஏற்பட்டது.இந்த தகவலை தங்களுடைய நண்பர்களுக்கு பரிமாறி நிறுவனத்தின் பங்குகளில் அவர்களை முதலீடு செய்ய வைத்தனர்.
இந்த பரிவர்த்தனை வாயிலாக இந்த மூவர் மற்றும் இவர்களுக்கு உதவிய இந்தியாவை பூர்வீகமாக உடைய நான்கு நண்பர்களுக்கும் பெருத்த லாபம் கிடைத்தது.இவர்கள் இவ்வாறு உள்ளடி வேலை செய்து, 7.62 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதை, அமெரிக்க பங்குச் சந்தை கண்டுபிடித்தது. அதையடுத்து, ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement