கொழும்பு:
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கொழும்பு நகரில் நடைபெறும் 18வது பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் கூட்டாக பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாத வன்முறை, சைபர் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை கூட்டாக எதிர்க்க வேண்டும்.
வணிக ஒத்துழைப்பு, துறைமுக வசதிகள், படகு சேவைகள், கடலோர கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு முக்கியமானது.
கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் எங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.