பள்ளி வாகனங்களில் சினிமா பாடலை ஒலிக்க விடவோ, ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் பாடலை கேட்டபடியோ வாகனத்தை இயக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியில் பள்ளி வேன் மோதிய விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும், மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும், பள்ளி வாகனங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றக்கூடாது என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். சினிமா பாடல்களை கேட்டபடி பள்ளி வாகனங்களை இயக்கக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையாக பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள நபர்களை நியமிக்கவும், பள்ளி வாகனத்தில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் சீருடையுடன், அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM