கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பாஜக அல்லாத முதல்வர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜனநாயகத்தின் மீதான பாஜகவின் நேரடி தாக்குதல்கள் குறித்து கவலையை வெளிப்படுத்தி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தடுக்க, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைவரும் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக அரசு நாட்டின் அரசியலமைப்பு ஜனநாயகம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது கவலையளிக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்பட மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசியல் லாபத்துக்காகவும், எதிர்க்கட்சிகளை மிரட்டவும் பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் முடிந்த மக்களவை குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு மத்தியில், டெல்லி சிறப்பு காவல் (திருத்தம்) மசோதா 2021 மற்றும் சிவிசி (திருத்தம்) மசோதா 2021ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சி தலைவர்களை அடக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஆளும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆபத்தான போக்கு பாஜகவின் பழிவாங்கும் அரசியலை இனி எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பொறுத்து கொள்ளக்கூடாது.
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் தொடர்ந்து நீதித்துறையின் உத்தரவுகளை மீறுவதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. எனக்கு நீதித்துறையின் மீது அதிக மதிப்பு உள்ளது. சில பாரபட்சமான அரசியல் தலையீடுகளால், மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகிறது. இது நமது ஜனநாயகத்தில் ஆபத்தான போக்காக உள்ளது.
ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள் நமது ஜனநாயக அமைப்பில், நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முக்கிய தூண்களாக உள்ளனர். இதில் ஒருபகுதி பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் சீர்குலைந்துவிடும். நீதித்துறையின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதன் மூலம் இந்த நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை தாக்க பாஜக மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது.
மக்களுக்கு முற்போக்கு ஆட்சியை வழங்கவும், பாஜகவின் அடக்குமுறையை கட்டுப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியமாகி உள்ளது. “மத்தியில் ஆளும் பாஜகவை விரட்டியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். பாஜகவுக்கு எதிரான உத்திகள் குறித்து விவாதிக்க கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கிறேன். நமது நாட்டிற்கு தேவையான தகுதியான நல்லாட்சி வழங்கும் அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் ஒன்றுபட்ட கொள்கை ரீதியாக முற்போக்கு சக்திகள் அனைத்தும் பாஜகவை எதிர்க்க உறுதி ஏற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.