துபாய்: துபாயில் பாலிவுட் நடிகருடன் சேர்ந்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி உள்ளது. துபாய் எக்ஸ்போ – 2020 நிகழ்ச்சியில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார். அப்போது ‘இந்திய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் உலகளாவிய ரீச்’ என்ற தலைப்பில் அமைச்சர் உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனது ஹிட் டான்ஸ் பாடலான ‘மல்ஹாரி’க்கு ஒரு ஸ்டெப் போடும்படி அமைச்சரிடம் ரன்வீர் சிங் கேட்டுள்ளார். அதையடுத்து இருவரும் சேர்ந்து குத்தாட்டம் ஆடினர். தொடர்ந்து அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘துபாயில் உள்ள இந்தியர்களே இந்தியாவின் உண்மையான பிராண்ட் தூதர்கள்; ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் 17 லட்சம் மக்கள் பார்வையாளர்களாக உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்தியாவை உலகின் உள்ளடக்க துணைக் கண்டமாக மாற்றுவதே எனது நோக்கமாகும். இதன் மூலம் இந்தியாவில் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்திய பொழுதுபோக்கு துறை உலகளவில் பிரபலம் அடையும்’ என்றார்.