பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு – போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் பெண் டாக்டர் தற்கொலை

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் துசா மாவட்டம் லால்சொட் பகுதியில் டாக்டர் அர்ச்சனா மற்றும் அவரது கணவர் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. டாக்டர் அர்ச்சனா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். ஆனால், பிரசவத்தின் போது அந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துவிட்டார். 

இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அலட்சியமான மற்றும் தவறான சிகிச்சையால் தான் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளித்த டாக்டர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் அர்ச்சனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளான டாக்டர் அர்ச்சனா மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள தனது வீட்டில் உள்ள அறையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.