சென்னை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்படுகிறார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழக போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்படுகிறார். தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்புலம் என்ன?
முன்னதாக, “தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார்” என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறியிருந்தார். இந்த சர்ச்சையின் எதிரொலியாகவே, அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் கூறியது: “நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இல்லத்துக்கு, நானும் எனது நண்பருமான பிடிஓ அன்புக்கண்ணனும் சென்றோம். அமைச்சரின் இல்லத்துக்குச் சென்றவுடன், அமைச்சருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன். பதிலுக்கு அவர் வணக்கம் கூறவில்லை. என்னைப் பார்த்தவுடன் அமைச்சர், ஏன்யா நீ ஒரு …….. பிடிஓ, சேர்மேனுக்கு மட்டும்தான் நீ சப்போர்ட் பண்ணுவ, சேர்மேன் சொல்வதை மட்டும்தான் நீ கேட்ப, மற்றவர்கள் யார் சொன்னாலும் நீ கேட்க மாட்ட, யார் போன் செய்தாலும் எடுக்க மாட்ட, நீ ஒரு ……… சேர்ந்த பிடிஓ தானே?
இந்த பிளாக்ல, நீ ….. பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் உன்னை வைத்துள்ளேன். உன்னை உடனே டிரான்ஸ்பர் செய்து இந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன். முதன்மைச் செயலாளர் அவரது பெயரையும் உச்சரித்து, பலமுறை என்னை …… பிரிவைச் சேர்ந்த பிடிஓ என்பதைக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசினார்.
உடனடியாக என் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனே என்னை டிரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அமைச்சரின் உதவியாளர் கண்ணனிடம் கூறினார். மேலும், கடுமையாக என்னையும், அன்புக்கண்ணனையும் பேசிய “வெளியே போங்கய்யா” என்று நாயை விட கேவலமாக அமைச்சர் நடத்தினார். இதுகுறித்து ராம நாதபுரம் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகி யோரைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளேன்” என்று அவர் கூறியிருந்தார்.
(குறிப்பு: இந்தச் செய்தியில் சாதியின் பெயருக்கு பதிலாக ………….. என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.)