புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக நெல்லை மாவட்டம் கல்குறிச்சி கிராமத்தில் சேதமான அரசு பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டு மாற்று இடத்தில் தற்காலிகப் பள்ளி தயாராகி வருகிறது.
திருநெல்வேலியில் செயல்படும் சாப்டர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுக்க சேதமாகி இடியும் நிலையில் உள்ள அரசு பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்படி, 92 பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டது.
இந்த சமயத்தில்தான், நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ தென்கலம் மற்றும் தாழையூத்து அடுத்த கல்குறிச்சி கிராமங்களில் உள்ள அரசு பள்ளி கட்டடங்கள் மிகவும் சேதமாகி எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது என்று புதிய தலைமுறை களஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதனைத்தொடர்ந்து மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக புதிய தலைமுறையிடம் உறுதியளித்தார்.
அதன்படி, ஆய்வு செய்த மறுநாளே சேதமான பள்ளிக் கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. புதிய கட்டடம் கட்டும் வரை தற்காலிகமாக பள்ளிகள் இயங்க மாற்று கட்டடத்தில் பள்ளிகள் இயங்கவும் உடனடி நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளும் மேற்கொண்டனர். தற்போது இடிக்கப்பட்ட பள்ளிக்கு அருகில் உள்ள கோயில் வளாகத்திலும் மாற்று கட்டடத்திலும் பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM