புதுடெல்லி: “பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஆண்டு முழுவதும் தேர்தல் நடத்த வேண்டும்” என்று மக்களவையில் மத்திய அரசைக் கலாய்க்கும் வகையில் திமுக எம்.பி. செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான டி.என்.வி.செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வு குறித்துப் பேசினார். அப்போது அவர், “பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்யப் போகிறது? தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை கட்டுப்படுத்தப்படுமா? விலை உயர்வை கட்டுப்படுத்துவது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் விலைவாசி உயர்வு இருக்காது. எண்ணெய் விலை ஒரு பீப்பாய் நூறு டாலருக்கு மேல் சென்றாலும், இங்கு விலை ஏற்றம் இருக்காது.
சமீபத்தில் ரஷ்யா-உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் ஆரம்பகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் அது 5 மாநிலத் தேர்தல் சமயம் என்பது மட்டுமே. எனவே, அவைத் தலைவரின் மூலமாக அரசை நான் மனபூர்வமாக வலியுறுத்துவது என்னவெனில், ஆண்டு முழுவதும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தில் இருந்து சாமானிய மக்கள் காப்பாற்றப்படுவார்கள். இல்லை என்றால் பொதுமக்கள், விலைவாசி கூடி விடுமோ என்ற அச்ச நிலைக்கு வந்து விடுகிறார்கள்.
நிலைமை இப்படியே சென்றால் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை ஒருநாளில் காலை, மாலை என இரண்டு தடவை விலை உயர்த்தப்படும் நிலை வரலாம். எனவே, சாமானிய மக்களை காப்பாற்ற அரசாங்கம் ஆண்டு முழுவதும் தேர்தல் நடத்த ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.