புதுடில்லி:பொறியியல் கல்லுாரிகளை துவக்குவதற்கான தடை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொழில்நுட்ப கல்வி மையம் அறிவித்துள்ளது.
கடந்த, 2017 – 18ல் பொறியியல் கல்வியிடங்களுக்கு நிகரான மாணவர் சேர்க்கை, 49.8 சதவீத அளவிற்கே இருந்தது. இதையடுத்து, ‘இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லுாரிகள் துவக்க அனுமதிக்க வேண்டாம்’ என, பி.பி.ஆர்.மோகன் ரெட்டி தலைமையிலான குழு, இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்திற்கு பரிந்துரைத்தது. அதன்படி புதிய பொறியியல் கல்லுாரிகள் துவக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொழில்நுட்ப கல்வி மையம் அறிவித்துள்ளது. எனினும், தனியார் பங்களிப்புடன் மாநில அரசுகளும், மூன்று ஆண்டுகளுக்கு தலா, 5,000 கோடி ரூபாய் விற்றுமுதல் கண்ட நிறுவனங்களும் கல்லுாரிகளை துவக்க அனுமதிக்கப்படும். மேலும், 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் தொண்டு நிறுவனங்கள், குறைந்தது 10 ஆயிரம் மாணவர்கள் உள்ள கல்லுாரி நிர்வாகங்களுக்கும் விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என, இந்திய தொழில்நுட்ப கல்வி மையம் தெரிவித்துள்ளது.
Advertisement