காபூல் :
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல், தலிபான்கள் அங்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பாலின பிரிவினை அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். அதன்படி வாரத்தில் 4 நாட்கள் ஆண்களும், 3 நாட்கள் பெண்களும் பொழுதுபோக்கு பூங்காக்களில் அனுமதிக்கப்படுவர் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தங்களின் புதிய அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை என தலிபான்கள் வலியுறுத்தி வரும் அதே வேளையில், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பாலின பிரிவினை கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். 6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.