பெங்களூரு-மடாதிபதிகள் தொடர்பாக பேசிய சித்தராமையாவின், 73, சர்ச்சை கருத்துக்கு ஆதரவாக யாரும் ஊடகத்தினரை சந்திக்க கூடாதென காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளதால், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வரான அவர் அதிருப்தியடைந்துள்ளார்.’ஹிஜாப்’ எனப்படும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடை தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.அது தொடர்பாக பேசிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ‘மடாதிபதிகள் ஏன் தலையில் துண்டு அணிந்துள்ளனர்? என கேள்வி எழுப்பினார்.இதற்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, பல்வேறு தரப்பினர், மடாதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.சித்தராமையாவின் பேச்சு வெளியானவுடன், கர்நாடக மாநில காங்கிரஸ், இந்த விவகாரம் தொடர்பாக, ‘டிவி’ விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என தன் செய்தி தொடர்பாளர்களுக்கு அறிவுறுத்தியது.அதுபோல, சித்து பேச்சுக்கு யாரும் ஆதரவளிக்கக் கூடாது என கட்சி பிரமுகர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.எனினும், முன்னாள் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் அமைச்சர் காதர் அளித்த விளக்கங்கள், அவர்களின் தனிப்பட்ட கருத்தாக எடுத்து கொள்ளப்பட்டதே தவிர, கட்சியின் கருத்தாக பார்க்கப்படவில்லை.மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரிடம் கேட்டபோது, ‘இந்த கேள்வியை சித்தராமையாவிடமே கேளுங்கள்’ என்றார். இப்படி நாலாபுறம் இருந்தும் தன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், சித்தராமையா விரக்தி அடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
Advertisement