புதுடெல்லி: மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘கட ந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு-காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர் எண்ணிக்கையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ‘எந்த ஒரு சமுதாயத்தையும் சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கும் இருக்கிறது. அதன் அடிப்படையில் மதம் அல்லது மொழி சார்ந்து சிறுபான்மையினர் பிரிவினராக மாநில அரசுகள் வகைப்படுத்திக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.