புதுடெல்லி:
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா மற்றும் பாஜக எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் ஏப்ரல் 14-ந் தேதி வருவதையொட்டி, ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்
தொடங்கி 14ந் தேதிவரை சமூக நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூக நீதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக பட்டியிலின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
மேலும் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை மேலும் நீட்டிப்பு செய்வது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.