ஹாசன்-”கரும்பு விளைவித்ததற்கு விளக்கம் அளிக்கும்படி, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா மனைவி சென்னம்மாவுக்கு, வருமான வரித்துறை ‘நோட்டீஸ்’ வழங்கியுள்ளது” என அவரது மகன் ரேவண்ணா தெரிவித்தார்.ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா, 82. இவரது பெயரில் ஹாசன் தொட்டபுராவில் விவசாய நிலம் உள்ளது.அந்த நிலம் குறித்து விளக்கம் அளிக்கும்படி, வருமான வரித்துறையினர் சென்னம்மாவுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கியதாக கூறப்பட்டது.இது குறித்து ஹொளேநரசிபுரா ம.ஜ.த., எம்.எல்.ஏ.,வும், அவரது மகனுமான ரேவண்ணா ஹாசனில் நேற்று கூறியதாவது:போக்குவரத்து துறையில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் ஒவ்வொருவரும் 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு, நாட்டின் முன்னாள் பிரதமரின் மனைவிக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.என் தாய் பெயரில் உள்ள விவசாய நிலத்தில், இதற்கு முன் உருளைக்கிழங்கு விளைவித்தோம். தற்போது கரும்பு விளைகிறது. அடுத்து ஏதாவது விளைவிப்போம், இல்லை என்றால் அப்படியே விட்டு விடுவோம்.வருமான வரித்துறை நோட்டீசுக்கு உரிய பதில் தரப்படும். தேவை எனில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து கொள்ளட்டும். கரும்பு விளைவித்தற்கு நோட்டீஸ் வழங்கியிருப்பதை பார்க்கும் போது, நமது நிதி அமைச்சர் என்ன செய்கிறார் என தெரியவில்லை.பணம், சொத்து சேர்க்க வேண்டுமெனில், ஹாசனில் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்திருப்பேன். ஆனால் அத்தகைய செயலில் ஈடுபடவில்லை. ஊழல் அதிகாரிகளுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement