சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது அணிந்திருந்த ‘ஜாக்கெட்’ குறித்து அவதூறு பதிவிட்ட பாஜக நிர்வாகி காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளதால். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தொழில்முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில், துபாய், அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு தொழிற்துறையினர், முதலீட்டாளர்கள் என பல தரப்பினரை சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க உகந்த சூழலை எடுத்துக்கூறி, தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் அங்கு 6 நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், துபாய் பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த உடை குறித்து, பாஜகவினர் சமூக வலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும், துபாய் செல்லும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என்று நிதியமைச்சர் கூறியதாக தவறான தகவல் சமூகவலைத்தளத்தில் பரவியது. இது திமுகவினரிடையே ஆத்திரத்தை எழுப்பியது. மேலும், நிதியமைச்சர் பெயர் இதில் இணைக்கப்பட்டிருந்தால், அந்த டிவிட்டை, அவர் தமிழ்நாடு காவல்துறைக்கு அனுப்பி, வடிகட்டப்பட்ட முட்டாள் இதுபோன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது” என எச்சரித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியது தொடர்பாக திமுக இளைஞர் அணி எடப்பாடி நகர துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் எடப்பாடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்த டிவிட்டை பதிவிட்ட, பாஜக சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் அருள் பிரசாத்தை கைது செய்தது. அருள் பிரசாத் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தனது டிவிட் பதிவில், துபாய் செல்லும் போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என பதிவிட்டிருந்தது தெரியவந்தது. அருள் பிரசாத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.