பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் மீதான தாக்குதலை தடுத்த தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது சொந்த மக்களவைத் தொகுதிகளாக இருந்த பார்ஹ் மற்றும் நாளந்தாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு வாரகாலத்துக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த மார்ச் 27-ம் தேதி, தனது சொந்த கிராமமான பக்தியார்பூருக்கு சென்ற நிதீஷ் குமார் அங்கிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரரான ஷீல்பத்ரா யாஜி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்காக, கையில் மாலையுடன் சிலைக்கு அருகே நிதிஷ் குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போடப்பட்டிருந்த பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி நிதிஷ் குமாரை நெருங்கிய ஒருவர், அவரது முதுகில் பலமாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்து திரும்பி பார்த்த நிதிஷ் குமாரை மீண்டும் தாக்குவதற்காக அவர் கையை ஓங்கினார். அதற்குள்ளாக அங்கிருந்த போலீஸார், அந்த நபரை மடக்கிப் பிடித்து அந்தப் பகுதியில் இருந்து கொண்டு சென்றனர்.
அதைத்தொடர்ந்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நேற்று எழுப்பிய எதிர்க்கட்சிகள், அமளியில் ஈடுபட்டன. இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்ததை ஏற்க மறுத்து அவர்கள் தொடர்ந்து சிறிது நேரம் அமளியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய செய்தி: தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய் – பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM