லாகூர்:
ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 101 ரன்னில் அவுட்டானார். பென் மெக்ட்அர்மாட் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கிரீன் அதிரடியாக ஆடி 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப், ஜாஹித் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து சதமடித்தார். அவர் 103 ரன்னில் அவுட்டானார். அவருக்கு கேப்டன் பாபர் அசாம் ஒத்துழைப்பு தந்து அரை சதமடித்து, 57 ரன்னில் வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 45.2 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்வெப்சன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதையும் படியுங்கள்…ஐசிசி பெண்கள் ஒருநாள் போட்டி தரவரிசை: மிதாலி ராஜ், கோசுவாமி முன்னேற்றம்