சேலம்: சேலத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, மேயர் காரை மறித்து முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி 6-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராமச்சந்திரன் மேயராக பதவி வகித்து வருகிறார். இவரது வார்டில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில், கோரிமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேயர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான வார்டில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படாதது குறித்து மக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறியிருந்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்து நாட்கள் கடந்தும் குடிநீர் கிடைக்காத விரக்தியில் பொதுமக்கள் இருந்தனர்.
இந்நிலையில், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் காரில் கோரிமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மேயர் காரை மறித்து முற்றகையிட்டனர். ’இந்தப் பகுதியில் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது’ என்று மேயர் ராமச்சந்திரனிடம் பொதுமக்கள் காரசாரமாக பேசினர்.
காரை மறித்து பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை குறியதை கேட்ட மேயர் ராமச்சந்திரன், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். கோரிமேடு பகுதியில் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களிடம், ‘இனிவரும் நாட்களில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மேயர் காரை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.