பரதநாட்டிய உலகில் புகழ்பெற்ற கலைஞர் வி.பி. மான்சியா. இவர் இந்து இல்லை என்று, கேரள மாநில அரசின் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோவிலில், நடனமாட தடை செய்யப்பட்டிருக்கிறார்.
பரதநாட்டியத்தில் முனைவர் ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்கிறார் மான்சியா. இவரை இந்து அடிப்படைவாதிகள் மட்டும் எதிர்க்கவில்லை. மான்சியா முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்த போதிலும் பாரம்பரிய நடனக் கலைஞராக இருந்ததற்காக இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கோபத்தையும், புறக்கணிப்பையும் எதிர் கொண்டிருக்கிறார்.
மான்சியா தனது ஃபேஸ்புக் பதிவில் இது குறித்து விரிவாக பதிவிட்டுள்ளார். அவரது நடன நிகழ்ச்சி கேரளக் கோவிலில் ஏப்ரல் 21 அன்று நடைபெற இருந்தது. கோவிலின் நிர்வாக அலுவலர் ஒருவர் திடீரென மான்சியாவை அழைத்து அவர் இந்து இல்லை என்பதால் கோவிலில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று கூறிவிட்டார். இத்தகைய மேடைகள் கலைக்காக ஒதுக்கப்படவில்லை, கலைஞர்கள் எந்த மதம் என்பதே அவர்களுக்கு முக்கியம் என்று வருத்தப்படுகிறார் மான்சியா.
இதுமட்டுமல்ல அந்த நிர்வாக அதிகாரி மான்சியாவிடம் திருமணத்திற்கு பிறகு இந்துவாக மாறிவிட்டாரா, இல்லையென்றால் அப்படி மாற முடியுமா என்று அநாகரிகமாகவும் கேட்டுள்ளார். காரணம் மான்சியா திருமணம் முடித்திருப்பது இசையமைப்பாளர் சியாம் கல்யாண் எனும் ‘இந்துவை’. ஆனால் மான்சியா எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. உண்மையில் அவர் நாத்திகர். ஆனால் அவர் பிறப்பால் முஸ்லிம் என்பதால்தான் இந்தத் தடை. ஆக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, இந்து அல்லதா மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அம்மதங்களைச் சேர்ந்த நாத்திகர்களுக்கும் தடைதான்.
விபி மான்சியா
மான்சியாவிற்கு இந்த தடை முதல்முறையல்ல. சில வருடங்களுக்கு முன்பு குருவாயூர் கிருஷ்ணன் கோவிலிலும் அவர் இந்து இல்லை என்பதால் தடை செய்யப்பட்டார். இறுதியில் கலை மற்றும் கலைஞர்கள் மதம் மற்றும் சாதியால் பின்னிப் பிணைந்துள்ளதாக கூறுகிறார் மான்சியா. இது ஒரு மதத்திற்கு தடையாகவும் மற்றொரு மதத்திற்கு ஏகபோகமாகவும் மாறுகிறது. “இந்த அனுபவம் எனக்கு புதிதல்ல. நமது மதச்சார்பற்ற கேரளாவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை நினைவூட்டவே இங்கே பதிவு செய்கிறேன்” என்கிறார் மான்சியா.
கூடல்மாணிக்யம் கோவில் வளாகம் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் 10 நாட்கள் திருவிழா நடக்கும். விழாவின் போது 800க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பார்கள். மான்சியாவிற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கூடல்மாணிக்யம் தேவஸ்வம் வாரியத் தலைவர் பிரதீப் மேனன்,” கோவில் நெறிமுறைகளின் படி கலைஞர்கள் இந்துக்களா அல்லது இந்து அல்லாதவர்களா என்று கேட்க வேண்டும். மான்சியா தனக்கு மதமில்லை என்று எழுத்துப் பூர்வமாக கொடுத்திருந்தார். அதனால் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதான் வழக்கம்” என்று கூறியுள்ளார்.
இதைவிட அநாகரிகமான ஒன்றும் நடந்துள்ளது. கோவில் கமிட்டி உறுப்பினர் மான்சியாவிடம் அவர் இந்துவாக மதம் மாற முடியுமா என்று வேறு கேட்டுள்ளார். மான்சியாவின் கணவர் இந்து என்பதால் அந்த உறுப்பினர் அப்படி கேட்டுள்ளார். மதங்களின்றி வாழும் நான் எப்படி மதம் மாற முடியும் என்று கேட்கிறார் மான்சியா. ஒரு வேளை அவர் நாத்திகராக இல்லை எனும் பட்சத்தில் ஒரு கலைஞரை ஒரு கலை நிகழ்விற்காக மதம் மாறுங்கள் என்று கேட்பது எவ்வளவு பெரிய அநீதி.
மான்சியாவின் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து அவருக்கு தனிப்பட்ட செய்தி அனுப்பிய பலரும் தங்களுக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் கோவில் நிர்வாகத்தின் மூலம் நடந்திருப்பதாக கூறியிருக்கின்றனர். அதில் ஒருவர் கோவிலில் நிகழ்ச்சி நடத்துவதற்கு சாதி சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டியிருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதில் முரண் என்னவென்றால் மான்சியாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் குருவாயூர் மேல்பத்தூர் அரங்கத்தில்தான் நடைபெற்றது. தனது நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கோவில்களில்தான் நடந்திருக்கின்றன என்கிறார் மான்சியா. ஒரு கோவிலில் அவர் இந்து இல்லை என்பதற்காக கோவிலின் வெளியே மேடை அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்தது. மற்ற கோவில்களில் உள்ளே நிகழ்ச்சி நடந்திருக்கிறது. ஆகவே இத்தகைய மதம் சார்ந்து தடை செய்யப்படுவது என்பது பெரிய கோவில்களில் மட்டும் நடக்கிறது.
இஸ்லாத்தில் பரதநாட்டியத்திற்கு இடமில்லை
இப்படி இந்து அடிப்படைவாதிகளிடமிருந்து மட்டும் எதிர்ப்புகள் வரவில்லை. பிறப்பால் முஸ்லிமான ஒருவர் எப்படி பரதநாட்டியம் ஆடலாம் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகளும் அவரை எதிர்க்கின்றனர். 2007ஆம் ஆண்டில் அவரது தாயார் அமீனா இறந்த போது அவரை முஸ்லிம்களின் இடுகாட்டில் புதைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மான்சியாவைப் போல அவரது சகோதரி ரூபியாவும் பரத நாட்டியக் கலைஞர். இருவரும் மசூதியில் எல்லோர் முன்னிலையிலும் அடக்கம் செய்யுமாறு கெஞ்சினர். ஆனால் அவர்கள் பரதநாட்டியக் கலைஞர்கள் என்பதால் மசூதி நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. இறுதியில் சகோதரிகள் இருவரும் தாயாரின் சொந்த இடத்தில் அடக்கம் செய்தனர்.
விபி மான்சியா
மான்சியாவும் ரூபியாவும் சாலையில் நடந்து சென்றாலும் முஸ்லிம்கள் சிலர் திட்டுவார்கள். சிலர் தாக்கவும் முயன்றனர். அவர்கள் பரதம் ஆடுவதால் நரகத்திற்கு செல்வார்கள் என உறவினர்களும் நண்பர்களும் கூறுகிறார்கள்.
இப்படி இருதரப்பிலும் மான்சியா சித்ரவதைகளை எதிர்கொண்டுதான் ஒரு பரதநாட்டியக் கலைஞராக பயணம் செய்கிறார்.
ஏசுதாசிற்கும் அனுமதியில்லை
பிரபல பின்னணிப் பாடகரான ஏசுதாசின் கதையை எடுத்துக்கொள்வோம். ஏசுதாஸ் பிறப்பால் கிறித்தவர். ஆனால் நடைமுறையில் ஒரு இந்துவாக வாழ்பவர். பல இந்துக் கடவுள்களைப் பற்றிய பக்திப் பாடல்களை பாடியுள்ளார். சபரிமலைக்கு மாலை போட்டு போகும் பக்தர்கள் இவரது பாடலைக் கேட்காமல் இருப்பதில்லை.
இருப்பினும் ஏசுதாஸுக்கு குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பலமுறை பாடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவிற்கும் அவர் கிருஷ்ணனைப் பற்றியும், குருவாயூரப்பனைப் பற்றியும் பல பாடல்களைப் பாடியுள்ளார். கோவிலுக்குள் ஒரு கொசுவோ, பூச்சியோ நுழைவதற்கு அனுமதி இருக்கும் போது எனக்கு அனுமதி இல்லை என்று வருத்தப்படுகிறார் ஏசுதாஸ்.
கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உயர்நீதிமன்றமே அநீதியாக தீர்ப்பு எழுதிவிட்டது. மதமா, கல்வியா என்று அந்த மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குள்ளாகி விட்டது. இப்போது கர்நாடக இந்து கோவில்களின் வளாகத்தில் அல்லது திருவிழாக் கடைகளில் முஸ்லிம்கள் கடை போடக்கூடாது என்று உத்திரவிட்டிருக்கின்றனர்.
கலைக்கும் வணிகத்திற்கும் மதம் உண்டா?
வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் எல்லா மதத்தவரும் செல்கின்றனர். எல்லா மதத்தவரும் கடை போடுகின்றனர். இங்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே போன்ற இந்துக் கோவில்களின் திருவிழாக்களிலும் தமிழகத்தில் பிற மதத்தவர் கடைகள் போடுகின்றனர்.
ஆனால் பாஜகவின் ஆட்சியில் இந்த மதநல்லிணக்கம் மெல்ல மெல்ல அழிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் சடங்கு சம்பிரதாயம் என்ற முறையில் இந்து மத அடிப்படைவாதம் கோலேச்சுகிறது. இதை எதிர்த்து மார்க்சிஸ்டுகள் போராடுவதில்லை. பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்க்கும் அவர்கள் பண்பாட்டு ரீதியாக போராடவில்லை என்றால் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் நிச்சயம் பலம் பெறும்.
பொதுவில் கலைக்கு சாதி, மதம், மொழி இல்லை என்பார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு கலைஞனுக்கு சாதியும், மதமும் இருந்தால்தான் அவர் கலைஞனாக வாழ முடியும். இதுதான் இந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டின் யோக்கியதை.