உக்ரைனை இரண்டாக உடைக்கும் முயற்சியின் எதிரொலியாக கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய ராணுவம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, கடந்த மாதம் 24ம் திகதி அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. 33 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
வடகொரியா, தென் கொரியா போல
கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிய நிலையில், மரியுபோல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களை சர்வ நாசம் செய்துள்ளது. கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
இதை உணர்ந்து கொண்ட ரஷ்யா, வடகொரியா, தென் கொரியா போல உக்ரைனை இரண்டாக உடைக்க திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் உளவுத்துறை தளபதி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அதாவது மேற்கு உக்ரைன், கிழக்கு உக்ரைனை தனித்தனியாக உடைப்பதே ரஷ்யாவின் தற்போதைய திட்டம்.கிழக்கு உக்ரைனில் ஏற்கனவே டான்பாஸ் பிராந்தியத்தின் டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய நகரங்களை கிளர்ச்சிப்படை மூலம் ரஷ்யா வசம் உள்ளது.
கிழக்கு உக்ரைன் தான் குறி
எனவே கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்ற அப்பகுதியில் தற்போது ரஷ்ய படைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
அதே சமயம், கார்கிவ், கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது வான்வழி தாக்குதலை ரஷ்ய ராணுவம் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.
இதனிடையில் விளாடிமிர் புடின் – ஜெலன்ஸ்கி ஆகியோர் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லவ்ரவ் புடின்-ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இப்போதைக்கு தயாராக இல்லை.
முக்கியமான சில விஷயங்களுக்கு உக்ரைன் உட்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என கூறியுள்ளார்.